நீதிபதியை ஏமாற்ற நினைத்த திமுக கவுன்சிலர்...அதிரடி கைது!

நீதிபதியை ஏமாற்ற நினைத்த திமுக கவுன்சிலர்...அதிரடி கைது!

நில அபகரிப்பு வழக்கில் முன் ஜாமீன் பெற்றதாக நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் திமுக வட்ட செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நில அபகரிப்பு செய்த திமுக பெண் கவுன்சிலர்:

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை தொழிலதிபர் அமர்ராம் என்பவரை மிரட்டி, கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரைக்கு வரவழைத்த மர்மநபர்கள் சிலர், அங்கிருந்து அவரை காரில் கடத்தி சென்று திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.  பின்னர், அங்கு தொழிலதிபருக்கு சொந்தமான 3 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ. 60 லட்சத்துக்கு எழுதி வாங்கியுள்ளனர்.

தீவிர விசாரணை:

இது தொடர்பாக, தொழிலதிபர் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட மெரினா போலீசாருக்கு, சென்னை மாநகராட்சி 124 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவரான மயிலாப்பூர் பகுதி திமுக வட்ட செயலாளரான கிருஷ்ணமூர்த்தி இருவரும் இணைந்து தொழிலதிபரை கடத்திச் சென்று அவரது சொத்தை எழுதி வாங்கியது என தெரிய வந்தது. 

இதையும் படிக்க: ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ்...!காரணம் இதுதானாம்...!!

தலைமறைவாகிய குற்றவாளிகள்:

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக போலீசார் சென்றபோது, திமுக கவுன்சிலரான விமலாவும், அவரது கணவரான திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியும் தலைமறைவாகியுள்ளனர். அதன்பின் இருவரும் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் வாங்கியுள்ளனர்,

போலி ஆவணங்கள்:

இந்நிலையில் நேற்று இருவரும் தாங்கள் பெற்ற முன் ஜாமீன் ஆவணங்களை சமர்பிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது முன் ஜாமீன் வழங்கிய ஆர்டரை நீதிபதி சரிபார்த்தபோது, முன் ஜாமீன் காலாவதியானதும், அந்த ஆர்டரை போலவே தேதி மாற்றி போலியாக ஒரு ஆர்டரை தயார் செய்து கொடுத்ததும் தெரிய வந்தது. 

நீதிபதி உத்தரவு:

இதனையடுத்து போலி ஆவணங்களைச் சமர்பித்ததாகக் கூறி திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைதான கிருஷ்ணமூர்த்தியின் சகோதரிக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் கிருஷ்ணமூர்த்தி அபகரித்ததும், இது குறித்த வழக்கு பதிவு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், காலாவதியான முன் ஜாமீன் ஆவணங்களை போலியாக உருவாக்கி அதனை நீதிமன்றத்தில் கொடுத்த திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.