நில விவகாரம்; மாயாஜால் நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மாயாஜால் நிலத்திற்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிராக நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் தாமாக முன் வந்து விசாரணை நடத்த பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து மாயாஜால் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை அடுத்த கானத்தூர் ரெட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்துக்கு, மாயாஜால் நிறுவனத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிராக, தாமாக முன் வந்து விசாரணை நடத்துவது தொடர்பாக நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர், 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி மாயாஜால் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நிலத்தை கடந்த 1999ம் ஆண்டு வாங்கியதாக கூறும் மாயாஜால் நிறுவனம், அதற்கு பட்டா கோரி விண்ணப்பிக்கவில்லை. மாறாக 2003ம் ஆண்டு நிலத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்ததால், அந்த நிலம் அரசு நிலமாகவே கருத வேண்டும் எனக் கூறி, நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனரின் நடவடிக்கையில் தலையிட எந்த காரணமும் இல்லை என, மாயாஜால் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த நிலத்துக்கு பட்டா வழங்கிய  உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தாமாக முன்வந்து எடுத்த விசாரணையை தொடர ஏதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் மீது பண மோசடி புகார்!!!