ஒரு காவல் நிலையத்தையே அலற விட்ட போதை ஆசாமி!!

ஒரு காவல் நிலையத்தையே அலற விட்ட போதை ஆசாமி!!
Published on
Updated on
1 min read

தன் கண் முன்பே மூன்று பேர் கொண்ட கும்பல், ஒருவரை கொலை செய்ததாக கூறி போலீசாரை இரவு முழுவதும் அலைக்கழித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு காவல் நிலையத்தில் 29-ம் தேதியன்று போதை ஆசாமி ஒருவர் விறுவிறுவென ஓடி சென்று ரெயில்வே மேம்பாலத்தின் அருகே கொலை நடந்ததாக பதற்றத்துடன் சொல்லி விட்டு அந்த இடத்தை நோக்கி ஓடினார். 

இதைக் கேட்ட காவலர்கள் உடனே ரெயில்வே மேம்பாலத்தின் கீழே சென்று பார்த்தபோது அங்கு மதுபாட்டில்களும், குடித்து விட்டு கீழே போட்ட க்ளாஸ்களும், சிப்ஸ் பாக்கெட்டுகளுமே கிடந்துள்ளன. வழக்கமாக அந்த இடம் மதுப்பிரியர்களின் கூடாரமாகவே விளங்கி வந்த நிலையில் யாரோ ஒரு மதுப்பிரியர்தான் போலியான தகவலை கூறியிருக்கிறார் என நினைத்து அவரவர் வேலைகளை பார்க்கத் தொடங்கினர் போலீசார். 

பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்ற அதே நபர் மேம்பாலத்தின் கீழ் கொலை நடந்ததாக கூறி மீண்டும் அதிர்ச்சியை கிளப்பினார். இதையடுத்து அந்த போதை ஆசாமியை அலோக்காக தூக்கிய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் என 10-க்கும் மேற்பட்ட போலீசார் கொலை நடந்ததாக கூறப்பட்ட இடத்திற்கு சென்றனர். 

அங்கு அந்த ஆசாமி கூறியபடி ரத்த சுவடுகள் கூட எதிலும் தென்பட்டிருக்கவில்லை. இதையடுத்து பொறுமை இழந்த போலீசார் அன்பாக கவனித்து பார்த்தனர். ஆனாலும் அசராத அவர் இந்த இடத்தில்தான் ஒருவர் வந்தார். அவரை துரத்திக் கொண்டு 3 பேர் வந்தனர். கடைசியில் துண்டு துண்டாக வெட்டி கொன்றதை இரண்டு கண்ணால் பார்த்தாகவும், தற்போது ஆளையும் காணோம். ரத்தத்தையும் காணோம் என விழிபிதுங்கி நின்றுள்ளார்.

சொன்னதையே சொல்லும் கிளி பிள்ளை போல மீண்டும் மீண்டும் அதையே தெரிவித்த ஆசாமியை தனியே அழைத்து விசாரித்தனர். இதில் அந்த நபரின் பெயர் கார்த்திக் என்பதும் நத்தம் நாகாத்தம்மன் கோயில் தெரு பகுதியில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்த போலீசார் நல்ல மருத்துவரை தேர்ந்தெடுத்து பார்க்குமாறு அறிவுரை வழங்கி விட்டு பெருமூச்சு விட்டு காவல்நிலையம் திரும்பினர். 

இரவில் போதை ஆசாமியின் பேச்சைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய போலீசார் கடைசியில் கிணற்றைக் காணோம் கதையாய் ஏமாற்றத்தோடு திரும்பியதுதான் மிச்சம். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com