போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து காவலரை மிரட்டிய "குடிமகன்"... வலைதளத்தில் வைரலாகும் வீடியோ...

போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து காவலரை மிரட்டிய "குடிமகன்"... வலைதளத்தில் வைரலாகும் வீடியோ...

சென்னையில் குடிபோதையில் காவல் நிலையத்திற்குள் சென்று காவலரை மிரட்டிய நபரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (எ) பிச்சைக் கார்த்தி. கூலி வேலை செய்து வரும் இவர் அவ்வப்போது அபிராமபுரம் காவல் நிலையத்திலும் சிறு சிறு எடுபிடி வேலைகள் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் குடி போதையில் ஒரு கையில் எலுமிச்சை பழம் இன்னொரு கையில் பிளேடுடன் அபிராமபுரம் காவல் நிலையத்திற்குள் நுழைந்த கார்த்தி பாரா பணியில் இருந்த காவலர் சதீஷ் குமார் என்பவரை அநாகரீகமான முறையில் பேசி, தனது ஏரியாவிற்குள் ரோந்து வந்தால் வெட்டி விடுவேன் எனவும் கூறி மிரட்டினார்.

கார்த்தி காவலர்களை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கார்த்தி (எ) பிச்சை கார்த்தி-யை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரை விரைவில் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளதாகவும், கார்த்தி மீது அதே காவல் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 மாதத்திற்கு முன் கார்த்தி இதேபோன்றொரு சம்பவத்தில் ஏற்கனவே ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.