அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: அமலாக்கத் துறை மனு மீது இன்று விசாரணை!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களை இணைக்கக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது. 

தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2001 - 200 6ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைபெற்ற அதிமுக அட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் மீது 200 6 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையால் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக முடிவுகள் கிடைக்கவில்லை.

இந்த சொத்து குவிப்பு வழக்கை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டது. இதில் ரூ.2 கோடியே 7 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ. 6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களை இணைக்கக்கோரி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அனுமதி கேட்டது. தற்போது அமைச்சராக பதவி வகித்து வரும் அனிதா ராதாகிருஷ்ணனின் வழக்கு விசாரணைக்கு உதவ அமலாக்கத்துறையை இணைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமலாக்கத்துறையின் இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்களைத் தாக்கல் செய்த அமலாக்கத்துறை தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தது. அப்போதே இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் அமலாக்கத்துறை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் அன்றைய தினமே வழங்கப்படும் என பலர் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் தீர்ப்பும் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.