’ பிரதமரின் அனைவருக்கும் வீடு ’ திட்டத்தில் முறைகேடு..?

’ பிரதமரின்  அனைவருக்கும் வீடு ’  திட்டத்தில் முறைகேடு..?

நெல்லை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடில் ஈடுபட்ட குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவருக்கு தலா  50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி திருநகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்:- 

திருநெல்வேலி திருநகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கடந்த 2017 ஆண்டு விண்ணப்பித்தேன் விசாரணை செய்த குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் அதிகாரிகள் அந்தத் திட்டத்தில் என்னை தேர்வு செய்தனர்.

வீடு கட்டுவதற்கான ஒப்பந்தத்தை செயற்பொறியாளர்களின் உறவினர் ஒருவர் மூலம் வீடு கட்டும் ஒப்பந்தம் செய்ய வைத்தனர். இந்தத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு நான்கு தவணையாக ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள். வீட்டு வேலைகள் ஆரம்பித்து இரண்டு தவணையாக ஒரு லட்சம் பெற்றேன்.

இதனிடையே பல்வேறு முறைகேடுகள் ஒப்பந்ததாரர் செய்தார். இதனை உதவி செயற்பொறியாளர்களிடம்  கூறியும்,  எந்த நடவடிக்கையும் இல்லை.  எனவே முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மீதித் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்",  என கடந்த 2019 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணை செய்யப்பட்டு நீதிபதி தீர்ப்பு  வழங்கியுள்ளார்.

அதில்:-   ” அனைவருக்கும் வீடு என்ற ஒன்றிய  அரசின் திட்டத்தின் கீழ் மனுதாரர் விண்ணப்பித்து அதில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அதில் ஒரு லட்சம் ரூபாயும் பெற்றுள்ளார் இந்நிலையில் நெல்லை மாவட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டிற்கு உள்ளான குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முறையான பதில் அளித்ததாக தெரியவில்லை எனவே இவர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது குற்றச்சாட்டிற்கு உள்ளான இரண்டு நிர்வாக உதவி செயற்பொறியாளரிடமிருந்து தலா 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது இந்த அபராத தொகையை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின்  பயன்படுத்த தனது  உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும் மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொறியாளர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த முறைகேடு குறித்து என்ன நடந்தது என்பது தெரிய வரும்.

ஒன்றிய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் திட்டத்தின் நோக்கம் பயனாளிகளை சென்றடையும் வகையில் உரிய வழிமுறைகளை பகுத்து பயனாளிகள் தெரிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு அரசு ஏற்படுத்த வேண்டும்”,  என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். 

இதையும் படிக்க   | நலத்துறைப் பள்ளிகளில் பொதுக்கலந்தாய்வா? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆதிதிராவிடர் நலத்துறை!