விசா இல்லாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் தங்கிய ஸ்ரீலங்கன்ஸ்...

உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டவர்களுக்கான பிராந்திய பதிவு அலுவலகத்தில் (FRRO) Exit Permit விண்ணப்பிக்க வந்த 4 இலங்கையர்கள், உறவினரான தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசா இல்லாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் தங்கிய ஸ்ரீலங்கன்ஸ்...

இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் நவநீதன் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை சென்னை சாஸ்த்ரி பவனில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான பிராந்திய பதிவு அலுவலகத்தில் Exit Permit விண்ணப்பிக்க வந்தார். அப்போது அவரிடமிருந்த ஆவணங்களை பரிசோதனை செய்தபோது விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து வெளிநாட்டவர்களுக்கான பிராந்திய பதிவு அலுவலக உதவி அதிகாரி ரம்யா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் நவநீதன் (34), அவரது மனைவி கிருபாஜினி (32), மகள் அக்சியா (11), மகன் அக்சயன் (7) மற்றும் திருச்சி கண்ணூர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருபாஜினியின் சகோதரி நளினி (46) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மகேஸ்வரன் நவநீதன் இலங்கையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியில் மாவட்ட செயலாளராக இருந்து வருவதும், விசா இல்லாமல் இவர்கள் 4 பேரும் உறவினரான திருச்சியில் உள்ள நளினியின் வீட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வசித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் மீது வெளிநாட்டவர்களுக்கான சட்டப்பிரிவு 14-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.