பண்ணை வீட்டில் திருடுபோன விலை உயர்ந்த பொருட்கள்...! போலீசார் தீவிர விசாரணை...!

உத்திரமேரூர் அருகே பண்ணை வீட்டில் கொள்ளை....! லேப்டாப், டிவி உட்பட விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக தகவல்.

பண்ணை வீட்டில் திருடுபோன விலை உயர்ந்த பொருட்கள்...! போலீசார் தீவிர விசாரணை...!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள கட்டியாம்பந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பண்ணை சொகுசு வீடுகள் உள்ளன. இதில் சென்னையை சேர்ந்த ஜெய பிரகாஷ் என்ற தொழிலதிபருடைய சொகுசு பண்ணை பங்களா உள்ளது. இதில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தப் பண்ணை வீட்டில் 10 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் வந்து பார்த்த போது பண்ணை வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பங்களாவின் பணியாளர்கள், உரிமையாளர் ஜெயபிரகாஷுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த ஜெயப்பிரகாஷ் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் பேரில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் பதிந்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பெரிய டிவிக்கள், லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் கண்காணிப்பு கேமராவில்  பதிவாகும் ஹார்ட்டிஸ்க் உள்ளிட்ட சாதனங்களையும் திருடி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.