வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 22 லட்சம் மோசடி... புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..

3 ஆண்டு புகார் முடிவுக்கு வருமா? என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 22 லட்சம் மோசடி... புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தை சேர்ந்தர் சுசில் குமார். இவருடைய உறவினர் மூலமாக சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் அடுத்த பிரமனூர் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பழக்கமாகியுள்ளார்.

இதையடுத்து முனீஸ்வரன் வெளிநாடுகளில் ஆட்கள் தெரியும் என்றும், வேலைக்கு ஆட்களை அனுப்பி வருவதாக சுசில் குமாரிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய சுசில் குமார் கடந்த 2017-ம் ஆண்டு உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என 22 பேரை வெளிநாட்டிற்கு அனுப்ப 22 லட்சம் ரூபாய் பணத்தை முனீஸ்வரனிடம் கொடுத்துள்ளனர். 

இதையடுத்து வெளிநாட்டு அனுப்புவதாக கூறி முனீஸ்வரன் மதுரை விமான நிலையத்திற்கு அனைவரையும் அழைத்துவரும்படி கூறியுள்ளார். இதனை நம்பிய சுசில் குமார் அனைவரையும் அழைத்துக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்ற போது விசாவில் பிழை உள்ளதாகவும், கம்பெனி சரியில்லை என ஏதோ ஒரு காரணத்தை கூறி அவர்களை மீண்டும் வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுசில் குமார், நியமன ஆணை மற்றும் விசாவை சரிபார்த்த போது அது போலி என்பது தெரியவந்தது. இதைடுத்து பணத்தை திருப்பி கொடுக்கும் படி பாதிக்கப்பட்டவர்கள் சுசில் குமாரிடம் கேட்டுள்ளனர். இதைதொடர்ந்து முனீஸ்வரனிடம்  கேட்ட போது அதனை திருப்பி கொடுக்காமல் 3 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளார். சுசில்குமாருக்கு நெருக்கடி அதிகமானதால் விவசாய நிலம் மற்றும் வீடு ஆகியவற்றை விற்று அந்த பணத்தை சிலருக்கு மட்டுமே கொடுத்துள்ளார்.

சுமார் 3 ஆண்டுகளாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வரும் முனீஸ்வரன் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்வது தற்போது வாடிக்கையாக உள்ளது. மேலும் இது தொடர்பான புகார்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் குற்றங்கள் குறையும். எனவே ஏமாற்றியவர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுத்து  பணத்தை மீட்டு தருவதுடன் இனி இது  போன்ற  மோசடி செயல்கள் செய்ய  மற்றவர்கள் அஞ்சும் வகையில்  தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.