வடமாநில டிஐஜி என கூறி நூதன முறையில் மோசடி- மிரட்டல் மன்னன் கைது

நாகையில் பல்வேறு இடங்களில் வடமாநில டிஐஜி என கூறி நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

வடமாநில டிஐஜி என கூறி நூதன முறையில் மோசடி- மிரட்டல் மன்னன் கைது

நாகப்பட்டினம் புதிய கடற்கரை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த  சூப்பர் மார்கெட்டிற்கு கடந்த 24 -ம் தேதி காரில் வந்த நபர் பொருட்களை வாங்கியுள்ளார். அதன்பின்னர் கடை ஊழியர் பொருட்களுக்கான பணத்தை கேட்ட போது காரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார் அந்த நபர்.

உடனே கேசியர் விக்னேஷ்வரன் கார்டு இயந்திரத்துடன் காருக்கு அருகில் சென்றார். அப்போது அந்த நபர் தன்னை மகேந்திரவர்மா என்றும், குஜராத்தில் டிஐஜியாக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. நாகை எஸ்பியே நான் கூப்பிட்டால் உடனே வருவார். அப்படி இருக்கும் என்னிடமே பணம் கேட்கிறாயா என கேஷியரை மிரட்டியுள்ளார் காரில் வந்த நபர்.

இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து விக்னேஷ்வரன் வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கடந்த  28ம் தேதி வெளிப்பாளையம் அடுத்த பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும்  ரவி என்பவரிடம் காரில் வந்த நபர் ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கி கொண்டு டிஐஜி என கூறி மிரட்டி சென்றுள்ளார்.

இது குறித்து ரவி வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த இரண்டு புகார்களை பெற்ற வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என உறுதி செய்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவர் நிற்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா ஜமீன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் என்பதும் இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கவிதாவிடம் ஓட்டுனராக பணிபுரிந்தது தெரியவந்தது.

மேலும் கவிதா பணி உயர்வு பெற்று நாகையில் இன்ஸ்பெக்டராக வந்தவுடன் நாகை வந்த மகேஷ் தனது பெயரை மகேந்திரவர்மா என்று மாற்றி கொண்டு வடமாநிலத்தில் டிஐஜியாக வேலை பார்த்து வருவதாகவும், இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கவிதாவின் கணவர் என கூறி கொண்டு டிப்டாப்ஆக உடை அணிந்து கொண்டு நாகையில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் காவல்துறையில் உள்ள சிலரிடமும் பதவி உயர்வு வாங்கி தருவதாக கூறி மகேந்திரவர்மா மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதற்கிடையில் இச்சம்பவம்  குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், டிஜஜி என கூறி மோசடி செய்த மகேந்திரவர்மா, இது போல் வேறு ஏதேனும் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என   தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.