வெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்த தம்பதி.. கணவன் கைது, மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு...

வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த தம்பதியரில் கணவனை  விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்த தம்பதி.. கணவன் கைது, மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு...
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ஏரோநாட்டிக்கல் பொறியியல் பட்டதாரி வெங்கடேஷ். இவரது தந்தை மாசிலாநந்தனம் தொழிலதிபர் ஆவார்.  வெங்கடேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை விருகம்பாக்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 
அதில் தான் வெளிநாட்டில் எம்.எஸ் எனப்படும் மேற்படிப்பு படிப்பதற்காக முயற்சித்து வந்ததாகவும் அப்போது கார்த்திக் மற்றும் சௌகார்த்திகா என்ற தம்பதியர், தன்னை அணுகியதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் தன்னிடம் சாலிகிராமத்தில் ரித்விக் அண்ட் வ்ருக்க்ஷா கன்சல்டண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தங்கள் நிறுவனம் மூலம் பலரையும் மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்ததாக புகாரில் கூறியுள்ளார். மேலும் யூ.கே வில் உள்ள சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்புக்கு தாங்கள் சீட் வாங்கித் தருவதாகக் கூறி தன்னை நம்ப வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்தப் படிப்பிற்கான செலவு 39 லட்ச ரூபாய் ஆகும் எனவும் கூறியதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பல்வேறு தவணைகளில் 38 லட்சத்து 89 ஆயிரத்து 550 ரூபாய் தான் அவர்களிடம் செலுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு நீண்ட நாட்களாகியும் அட்மிஷன் தொடர்பாக எந்தவித தகவலும் இல்லாததால் தொடர்ந்து சௌகார்த்திகா மற்றும் கார்த்திக்கை அணுகியதாகவும், பின்புதான் தனக்கு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது போன்ற கடிதத்தை தனக்கு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அவர்களை நம்பி வெளிநாடு செல்வதற்காக விசா பெற முயன்றபோதுதான், தான் வைத்திருந்த அட்மிஷன் கடிதம் மற்றும் ஆவணங்கள் போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து சௌகார்த்திகா மற்றும் கார்த்திக் இருவரையும் பலமுறை தொடர்பு கொண்டும் தனது அழைப்பை எடுக்கவில்லை எனவும் அதன்பின் அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், வெங்கடேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 
கடந்த மார்ச் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் சௌகார்த்திகா மற்றும் கார்த்திக் தம்பதியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த கார்த்திக் என்பவரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அவரது மனைவி சௌகார்த்திகாவை போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்த விவகாரத்தில் வெங்கடேஷ் மட்டுமல்லாது பலரும் வெளிநாட்டில் மேற்படிப்பு படிப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து ஏமாந்து உள்ளதாக வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து கணவன் மனைவியாக கோடிக் கணக்கில் மோசடி செய்த இந்த தம்பதியினர் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தம்பதியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.