நகைக்காக மூதாட்டி படுகொலை...உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய கொடுரம்....

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டியை நகைக்காக கழுத்தை நெறித்து படுகொலை செய்யப்பட்டு, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி காவிரி ஆற்றில் விட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நகைக்காக மூதாட்டி படுகொலை...உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய கொடுரம்....

கரூர் மாவட்டம், குளித்தலை காவல் நிலையத்திற்குட்பட்ட பாரதி நகரைச் சேர்ந்த , அய்யர் என்பவரது மனைவி அன்னாச்சி. 76 வயதன இவர், கடந்த 25-ஆம் தேதி திங்கட்கிழமை, காலை 100- நாள் வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அன்னாச்சியின் மகன்   தமிழ்செல்வன்  என்பவர் குளித்தலை காவல் நிலையத்தில் 100 நாள் வேலைக்கு சென்ற தனது தாய் வீடு திரும்பவில்லை என புகார் செய்தார்.

புகாரையடுத்து குளித்தலை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். விசாரணையில் மூதாட்டி அன்னாச்சி எப்போதும் கழுத்தில் நகை அணிந்து இருப்பார் என்பதால் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது சிலரை நோட்டமிட்ட போலீசார், அவர்களை கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது சிலரை சில தடயங்களை வைத்து விசாரணை செய்தபோது, உண்மை அம்பலமானது.

மூதாட்டியிடம் அதே பகுதியை சேர்ந்த சங்கிலி என்பவரது மனைவி சத்யா பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்துள்ளார். இந்நிலையில் சத்யாவின் 16 வயது மகன் மூதாட்டி வீட்டிற்கு கடந்த 25 ந்தேதி சென்று அம்மா உங்களை கூட்டி வரச் சொன்னார் என கூறப்படுகிறது. அதன்பின்னர் மூதாட்டியும் மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாணவனின் தாய் மூதாட்டியிடன் பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சத்யா, அன்னாச்சியை தீர்த்து கட்டி, நகையை பறிக்க திட்டம் தீட்டியதும், கொலையை வீட்டிலேயே அரங்கேற்றியதும், கொலைக்கு எதிர் வீட்டுக்காரருமான முருகானந்தம்  என்பவரை உடந்தையாக வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக உடலை சாக்குமூட்டையில் கட்டி அன்று இரவு அல்லுர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசியதும், மூதாட்டி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு நகைக்கடையில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் மீதம் உள்ள நகைகளை குற்றவாளியான பெண் வீட்டில், புதைத்து வைத்து இருந்ததை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் உறவினர் என மூன்று பேரை கைது செய்து இருப்பதோடு மேலும் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது