ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடி மற்றும் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி? சைபர் கிரைம் காவல்துறை கொடுக்கும் அறிவுரை இதோ...

ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடி மற்றும் பிரச்னைகளை தவிர்ப்பது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடி மற்றும் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி?  சைபர் கிரைம் காவல்துறை கொடுக்கும் அறிவுரை இதோ...

தமிழகத்தில் அண்மை காலமாக இணையதளம் வாயிலாக பொதுமக்களை மோசடி செய்வது, சிறுவர்களை குறிவைத்து பாலியல் தொந்தரவு கொடுப்பது என பல்வேறு பிரச்னைகள் எழுந்து வரும் நிலையில், இதனை தடுக்க கோவை மாவட்ட சைபர் கிரைம் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அந்த வகையில், ஊரடங்கை பயன்படுத்தி ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி யாராவது முன் பணம் கேட்டால், அவர்களின் அழைப்பை உடனடியாக துண்டித்துவிட வேண்டும் என்றும்.,

பெண்கள் தங்களது புகைப்படத்தை முகநூல் பக்கம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்புகொண்டு ஏ.டி. எம் கார்டு எண், வங்கி கணக்கு மற்றும் பான் கார்ட் எண்ணை கேட்டால் உடனடியாக அவர்களின் அழைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தெரியாத எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை யாரேனும் மார்பிங் செய்து மிரட்டினால் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி நேரத்தில் பொதுமக்கள் யாரும் தங்களின் இதயதுடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை கண்டறியும் கருவி என எந்த செயலியையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்றும், இதனால் அவர்களின் தகவல் முற்றிலும் திருடப்படுவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் யாரும் தங்களின் நிலத்தில் மொபைல் டவர் அமைக்க உள்ளதாக கூறி பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை வழங்கியுள்ளது.