
நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள நவனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(22). இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போதே சக மாணவியான நந்தினி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்கு பின் இருவரும் நவனியில் வசித்து வருகின்றனர்.
தமிழ் செல்வன் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டின் அருகில் உள்ள ரமேஷ் மெடிக்கல்ஸ் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார். அப்போது கடை உரிமையாளர் ரமேஷ் என்பவருக்கும், நந்தினிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட கணவன் தமிழ் செல்வன், கடந்த ஓராண்டுக்கு முன்னரே மனைவியை கண்டித்ததோடு வேலைக்கு செல்ல வேண்டாம் வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளார்.
இதன் பின்பும் தமிழ் செல்வனுக்கு தெரியாமல் நந்தினியும், ரமேஷும் பழக்கத்தை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த தமிழ் செல்வன் இன்று காலை நந்தினியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் தனது காதல் மனைவி நந்தினியை அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு வீட்டில் இருந்து தப்பியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் போலீசார் தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்ததோடு, ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு தலைமறைவாக இருக்கும் தமிழ் செல்வனை தேடி வருகின்றனர்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு மனைவியின் தகாத உறவினாலும் கணவனின் ஆத்திரத்தாலும் தற்போது 3 வயது ஆண் குழந்தை தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும் அவல நிலை நவனி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.