ரூ.600  கோடி மோசடி செய்த ஐ.டி.பி.ஐ வங்கி அதிகாரிகளின் வழக்கு ரத்து மனு தள்ளுபடி!!

ரூ.600  கோடி மோசடி செய்த ஐ.டி.பி.ஐ வங்கி அதிகாரிகளின் வழக்கு ரத்து மனு தள்ளுபடி!!

600 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக ஐ.டி.பி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி விதிகளை மீறி,  சிவசங்கரனின் சிவா குரூப் ஆப் கம்பெனி உத்தரவாதத்தின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்ததன் மூலம், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஊழல் கண்காணிப்பு ஆணையர், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதன்படி சிபிஐ, 10 நிறுவனங்கள், வங்கி அதிகாரிகள் உள்பட 19 நபர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், வங்கி அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுத்ததை அடுத்து, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வங்கி அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டாலும், அதற்காக இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க || மறக்குமா நெஞ்சம் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கும் யுவன்!!