நடிகையை காரில் அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தது உண்மையா? உதவியாளரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை  

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பாலியல் புகார் அளித்த வழக்கில் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலர் ஆகியோர் விசாரணைக்கு இன்று காலை ஆஜராகினர்.

நடிகையை காரில் அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தது உண்மையா? உதவியாளரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை  
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பாலியல் புகார் அளித்த வழக்கில் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலர் ஆகியோர் விசாரணைக்கு இன்று காலை ஆஜராகினர்.
 
முன்னாள் அதிமுக அமைச்சரான மணிகண்டன் மீது நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று முறை கருக்கலைப்பு செய்து ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி புகார் அளித்தார்.
 
இதனையடுத்து கடந்த 30ஆம் தேதி அமைச்சர் மணிகண்டன் மீது கட்டாய கருக்கலைப்பு, கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.இதையடுத்து அமைச்சர் மணிகண்டனை பிடிக்க அடையாறு தனிப்படை போலீசார் ராமநாதபுரத்திற்கு விரைந்த போது தலைமறைவாகினார்.
 
அமைச்சர் மணிகண்டன் தேடப்பட்டு வந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிபதி முன் ஜாமீன் மனுவை ரத்து செய்து வருகிற 9ஆம் தேதி வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டது. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  முன்னாள் அமைச்சர் என்பதால் போதுமான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்தநிலையில்  அமைச்சர் மணிகண்டன் அமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு பணிப்புரிந்த அரசு கார் ஓட்டுனர், பாதுகாவலர், அரசு உதவியாளர் ஆகியோர் நேற்று (08-06-2021) நேரில் விசாரணைக்கு ஆஜராக அடையாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் நேற்று அவர்கள் யாரும் அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.
 
இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் அரசு பாதுகாப்பு அதிகாரி கெளரீஸ்வரன் மற்றும் அமைச்சரின் உதவியாளர் சரவண பாண்டி ஆகியோர் அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
 
அவர்களிடம், நடிகையுடன் மணிகண்டனுக்கு தொடர்பு உள்ளதா? கட்டாய கருக்கலைப்பு செய்ததது உண்மையா? நடிகையை காரில் அழைத்து சென்றது உண்மையா? என்ற ரீதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.
 
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்குக்கு தேவையான சில முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.