ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!!

கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது. 

கோவை PRS மைதானத்தில்   கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தப்பட்ட இன்று மறைந்த அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனிடம்  விசாரணை நடைபெற்றது.  மாலை 
சுமார் 6 மணியளவில் விசாரணை முடிந்து வெளியில் வந்த அய்யப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது பேசிய அவர், கனகராஜ் தொடர்பான கேள்விகளை சிபிசிஐடி போலீசார்  கேட்டதாகவும் அவர் குறித்து தெரிந்த தகவல்களை தான் தெரிவித்ததாகவும் கூறினார். குறிப்பாக கனகராஜின் நடவடிக்கைகள், சுபாவம்  தொடர்பாக கேட்டனர் என்றார். 3 சிபிசிஐடி அதிகாரிகள் இந்த விசாரணையில் இருந்ததாகவும் இவர்கள் புதியவர்கள் எனவும் தெரிவித்தார்.  2 ஆண்டுகள் தான் கனகராஜ் டிரைவராக  இருந்தார் என தெரிவித்த அய்யப்பன், ஜெயலலிதாவிடம் 6-7 ஓட்டுனர்கள் இருந்தோம், ஜெயலலிதாவிற்கு 
என்னை தவிர கண்ணன் என்ற ஓட்டுனரும் இருந்தார் என தெரிவித்தார்.

மேலும், கனகராஜ் ஜெயலலிதாவிற்கு ஓட்டுநராக இல்லை, அலுவலக வேலையை பார்த்து கொண்டிருந்தார் என கூறிய அவர்,  இரவு நேரங்களில் அவர் இருப்பார் என்றார். ஓட்டுனர்கள் அரசியல் வாதிகளுடன் தொடர்பில் இருக்க முடியாது, ஜெயலலிதாவிற்கு அது பிடிக்காது எனவும் தெரிவித்தார். 

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கோடநாடு எஸ்டேட் சென்றுள்ளேன், ஆனால் தங்களுக்கு(ஓட்டுநர்கள்)  பங்களாவிற்குள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது எனவும் தனிப்பட்ட முறையில் யாரும்  செல்ல முடியாது எனவும் தெரிவித்தார். ஜெயலலிதாவை பங்களா வாசல் படிக்கட்டில் விட்டு விட்டு வந்து விடுவோம் என தெரிவித்தார்.

ஓட்டுனர் கனகராஜ் எங்கள் எல்லாருக்கும் சங்கடத்தை கொடுத்துவிட்டார் என தெரிவித்தார். மேலும்
கனகராஜ் வேலையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் அரசியல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதாக கூறினார்.

இன்று சிபிசிஐடி விசாரணை திருப்திகரமாக இருந்தது எனவும் எழுத்துப்பூர்வமாகவும் வாக்குமூலம்  பெறப்பட்டது எனவும் தெரிவித்தார். ஓட்டுனர் கனகராஜ் முறையாக பணி செய்யவில்லை என்பதால் அவர் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என தெரிவித்தார். 2021 மே மாதம் சொந்த காரணங்களால் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினேன் எனவும், தற்போது எந்த பணியிலும் இல்லை எனவும்
30 ஆண்டுகள போயஸ் கார்டனில்  பணியாற்றி உள்ளேன் என  தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com