பயணியின் கவனத்தை திசை திருப்பி நகை கொள்ளை- அக்கா, தங்கை கைது

சிதம்பரத்தில் ஓடும் பேருந்தில் பயணியின் கவனத்தை திசை திருப்பி இரண்டரை சவரன் தங்க நகையை திருடிய அக்காள் தங்கையை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பயணியின் கவனத்தை திசை திருப்பி நகை கொள்ளை- அக்கா, தங்கை கைது

சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை பகுதியை சேர்ந்த சவுக்கத்அலி என்பவர் அவரது மனைவி குழந்தையுடன் சிதம்பரத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் அவர்கள் அருகாமையில் இருந்த இரு பெண்கள் சில்லரை காசுகளை தவறி விட்டது போல் நடித்து , கீழே விழுந்த காசை எடுத்து தரும்படி கூறியுள்ளனர்.

இதனை நம்பி காசை எடுக்க குணிந்த சவுக்கத் அலிக்கு தெரியாமல், அவர் வைத்திருந்த பையில் இருந்து இரண்டரை சவரன் தங்க நகையை எடுத்துவிட்டு, அருகில் இருந்த வேலங்குடி பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்களும் இறங்கியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சவுக்கத் அலி தான் கொண்டு வந்த பையில் நகை உள்ளதா என பார்த்துள்ளார். அதில் நகை இல்லை என தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியான பேருந்தில் இருந்து இறங்கி  நகையை திருடி சென்றவர்களை பின்தொடர்ந்து, கூச்சலிட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இரு பெண்களையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை மேற்க்கொண்ட போலீசார், இருவரும்  சேலம் மாவட்டம் அயோத்திப் பட்டணத்தை சேர்ந்த காயத்ரி மற்றும் அகிலா என்றும் இவர்கள் இருவரும் அக்கா, தங்கை என தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, அவர்களிடமிருந்த இரண்டரை சவரன் நகையை மீட்டு சவுக்கத் அலியிடம் ஒப்படைத்தனர்.