யூ-டியூப் சேனலில் பார்வையாளரை அதிகரிக்கும் போட்டி; வாலிபரை கடத்தியவர்கள் கைது!

யூ-டியூப் சேனலில் பார்வையாளரை அதிகரிக்கும் போட்டி; வாலிபரை கடத்தியவர்கள் கைது!

தருமபுரி அருகே தொழில் போட்டியில் யூடியூப் சேனல் நடத்திய வாலிபரை கத்தி முனையில்  கடத்திய 12 பேர் கும்பலை ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், லளிகம் அடுத்த தம்மனம்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார்(31), என்பவர் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள தனியார் கட்டடத்தில் யூ – டியூப் சானல் அலுவலகம் நடத்தி வருகிறார். இன்று காலை 12 பேர் கொண்ட கும்பல், ஆனந்தகுமாரின் அலுவலகத்துக்குள் புகுந்துள்ளனர். அப்பொழுது எதற்காக எங்களது யூ – டியூப் சானலில் போலியாக பார்வையாளர்களை அதிகபடுத்தியுள்ளாய், இதை நீ மட்டும் செய்தாயா வேறு யாருடனும் சேர்ந்து செய்தாயா என கேட்டு ஆனந்தகுமாரை, அந்த கும்பல் தாக்கியுள்ளது. மேலும் பட்டன் கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தகுமார் மற்றும் அலுவலகத்தில் இருந்தவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் துாக்கி சென்று, ஆனந்தகுமாரை கத்தி முனையில் காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த, ஆனந்தகுமார் அலுவலகத்தில் பணியாற்றி வரும் தருமபுரியை சேர்ந்த பிரோம்குமார், (18) என்பவர் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


இதைனை அடுத்து, தருமபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி டி.எஸ்.பி., செந்திகுமார் தலைமையிலான காவல் துறையினர் ஆனந்தகுமாரை கடத்தி சென்றவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில் ஆனந்தகுமாரை காரில் கடத்தி சென்ற 12 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர்  மடக்கி பிடித்தனர். இதனை தொடர்ந்து 12 பேர் கொண்ட கும்பலிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆனந்தகுமாரை கடத்திய சின்னசாமி என்பவர் யூ– டியூப் சானல் நடத்தி வந்தது தெரியவந்தது.   மேலும், ஆனந்தகுமார் தங்களது யூ – டியூப் சானலில் அதிக பார்வையாளர்கள் உள்ளது போல், பொய்யான தகவலை பதிவிட்டுள்ளதாகவும்,  இதனால், தங்களது  சானலை யூ– டியூப் நிறுவனம் தடை செய்துள்ளது. இதனால், தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆனந்தகுமார் தான் காரணம் என நினைத்து, நண்பர்களை வைத்து  கடத்தி சென்றது தெரியவந்தது.


இதையடுத்து கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த பழைய தருமபுரியை சேர்ந்த சின்னசாமி, 38,  இவருடைய கூட்டாளிகளான அதகபாடியை சேர்ந்த சீராளன்(30), கோடியூரை சேர்ந்த சுந்தரம்(30), சுரேஷ்(39), எ.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த முருகன்(26),  ராமு(30), மல்லிக்குட்டையை சேர்ந்த சதீஷ்(35), பெரியசாமி(27), கிருஷ்ணாபுரம் சந்திரன்(29), தருமபுரி தினேஷ்குமார்(23), சோளப்பட்டி மணி,(25 ) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருததி ஸிப்ட் கார், 6 பைக்குகள் மற்றும் ஆனந்தகுமார் அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களை பறிமுதல் செய்தனர். தருமபுரியில் யூடியூப் சேனல் நடத்தி, ஏற்பட்ட தொழில் போட்டியில், பட்ட பகலில் கத்தி முனையில், ஒருவரை 12 பேர் கொண்ட கும்பல் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க:செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!