ஆன்லைன் ரம்மிக்கு அடுத்த பலி... 5 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்த ஊழியர்...

ஆன்லைன் ரம்மி விளையாடி வீடு கட்டுவதற்காக சேர்த்து வைத்த 5 லட்சத்தை இழந்த நபர் தற்கொலை செய்துக் கொண்டதால் பரபரப்பு.

ஆன்லைன் ரம்மிக்கு அடுத்த பலி... 5 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்த ஊழியர்...

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். கடன் வாங்கிய பணத்தை இதில் விரயமாக்கியதால், வட்டி கட்ட வழியின்றி சிலர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையானது. ஆன்லைன் ரம்மிக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில் அப்போதைய அ.தி.மு.க அரசு, சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்தது. ஆனால் கடந்த ஆகஸ்டு 3-ம் தேதி தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆன்லைன் ரம்மி இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. இதனால் இதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் பின்வருமாறு:-

பனியன் நிறுவன ஊழியர் திருப்பூர் பழையகாடு ராஜமாதா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு 6 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வீடு கட்டுவதற்காக இருவரும் சிறுக. சிறுக 5 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தனர். ஆனால் இந்த பணத்தை வைத்து சுரேஷ் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனை மனைவி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் சுரேஷ் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்துள்ளார்.

வீடு கட்டுவதற்காக வைத்திருந்த சேமிப்பு பணம் ரூ.5 லட்சத்தையும் ஆன்லைன் ரம்மியில் அவர் இழந்துள்ளார். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில், சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷ் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.