சேத்துப்பட்டு வணிக வளாகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளையடித்த ஒருவர் கைது  

சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 72 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

சேத்துப்பட்டு வணிக வளாகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளையடித்த ஒருவர் கைது   

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஆ சிஷ் பன்சால் , இவருக்கு சொந்தமாக ஆந்திரா மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் வாகன பேட்டரிகளுக்கான அலுமினிய லீடு தயாரிக்கும் pondy oxides and chemicals ltd என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கான தலைமை அலுவலகம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 4-வது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி இந்த அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் இருந்த 72 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நிறுவன உரிமையாளர் சார்பில் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலுள்ள சி. சி.டி.வி கேமராக்கள் வேலை செய்யாததால் வணிக வளாகத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள சி. சி.டி.வி காட் சிகளைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், 24 மணி நேரமும் காவலாளிகள் பாதுகாப்பில் இருந்து வரும் வணிக வளாகத்தில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம் என்பதால் கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் (57) என்பவனைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து சுமார் 61 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்புள்ளது? என்பது குறித்தும், பாதுகாப்பு நிறைந்த வணிக வளாகத்தில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்தும் பிடிபட்ட பாண்டுரங்கன் என்பவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.