
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு சொந்தமாக மாதவரத்தில் இருக்கக்கூடிய இடத்தில் பிரச்சனை நிலவி வருவதால் மகேஷ் தனது தாய் மாமன் கண்ணனை சந்திப்பதற்காக அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பின்பகுதியில் காணாமல் போன தனது சகோதரரான ரமேஷ் தங்கிவந்த வீடு குப்பை மேடாக இருந்ததால் சுத்தம் செய்துள்ளார். சுத்தம் செய்யும் போது எலும்பு கூடாக ஒரு சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகேஷ் உடனே அமைந்தகரை காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், மகேஷின் சகோதரரான ரமேஷ் தாய்மாமன் வீட்டின் பின்பகுதியில் நீண்ட வருடங்களாக குடியிருந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரமேஷிற்கு திருமணம் ஆகவில்லை. 3600 சதுர அடி கொண்ட இந்த வீட்டை ரமேஷின் தாத்தா, தாய்மாமனான கண்ணனுக்கு எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த இடம் தொடர்பாக கண்ணனுக்கும், ரமேஷிக்கும் இடையே நீண்ட வருடங்களாக பிரச்சனை நிலவி வந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு கண்ணனுக்கு இந்த வீடு சொந்தமானது என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது.
இதனை தொடர்ந்தும் ரமேஷ் பின்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த இடம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரமேஷ் நீண்ட நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என தாய்மாமன் கண்ணன் மகேஷிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் மகேஷ் பல இடங்களில் தேடியும் ரமேஷ் கிடைக்கவில்லை என்பதால் எங்காவது வெளியூர் சென்றிருப்பார் என விட்டுவிட்டார்.
இந்த நிலையில் ரமேஷின் வீட்டை சுத்தம் செய்யும் போது இருந்த எலும்பு கூடாக சடலம் இருந்ததால் அது தனது சகோதரனை போல் இருப்பதாக புகார் அளித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட எலும்பு கூட்டை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததுடன் இது தற்கொலையா? அல்லது குடிப்பழக்கத்தால் உடல்நலிவுற்று இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள ரமேஷ் காணாமல் போய் 2 ஆண்டுகள் கடந்தும் அதுகுறித்து காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளிக்காமல் இருந்தது ஏன்? முன் வீட்டில் தாய் மாமாவான கண்ணன் வசித்து வந்த நிலையில் பின் வீட்டில் வசித்து வந்த ரமேஷ் காணாமல் போயும் அவர் குடியிருந்த வீட்டில் தேடிப்பார்க்காதது ஏன்? ஏற்கனவே தாய் மாமாவன கண்ணனுக்கும் ரமேஷுக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்து வந்துள்ள நிலையில் ரமேஷின் மரணத்தில் உள்நோக்கம் உள்ளதா? உள்ளிட்ட சந்தேகங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனை செய்யும் கட்டத்தை தாண்டிவிட்டதால் ஒரு சில எலும்புத்துண்டுகளை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தி மரணத்திற்கான காரணத்தை அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தகவல் வெளியாகியுள்ளது.