சொத்துக்காக எனது கணவரை அடைத்து வைத்துள்ளார்... ரஜினிகாந்தின் சம்பந்தி மீது பெண் பரபரப்பு புகார்...

ரஜினிகாந்தின் சம்பந்தி மீது பெண் ஒருவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சொத்துக்காக எனது கணவரை அடைத்து வைத்துள்ளார்... ரஜினிகாந்தின் சம்பந்தி மீது பெண் பரபரப்பு புகார்...

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். விசாகனின் தந்தை வணங்காமுடி அபெக்ஸ் லேபரட்டரி என்ற பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரர் முரளி ஸ்ரீனிவாசன். இவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் முரளி சீனிவாசனின் இரண்டாவது மனைவி எனக்கூறி சத்தியபாமா என்பவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். முரளி சீனிவாசனின் இரண்டாவது மனைவியாக ரகசியமாக வாழ்ந்து வருவதாகவும், தனக்கும் முரளி சீனிவாசனுக்கும் 8 மாத குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், உடல்நிலை மோசமான நிலையில் தனது கணவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதனால் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் வணங்காமுடி மற்றும் தனது கணவரின் முதல் மனைவி ஆகியோரிடம்   முரளி சீனிவாசனின் இரண்டாவது மனைவி என்ற உண்மையை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தன் கணவரின் உடல்நிலை பற்றி தனது கணவரின் முதல் மனைவியின் வீட்டிற்கு சென்ற போது தன்னை வீட்டிலிருந்து அடித்துத் துரத்தியதாகவும் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நிறுவனத்தின் உரிமையாளர் வணங்காமுடியிடம் கேட்டபோது உதவுவதாக தெரிவித்து விட்டு பின்னர் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

குறிப்பாக தனது கணவர் முரளி சீனிவாசனை சொத்துக்காகவோ அல்லது ரகசிய ஆவணங்களை பெறுவதற்காக வணங்காமுடி அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  மேலும் தன் கணவரை எங்கு வைத்துள்ளார்கள் என்ற தகவலும் தெரிவிக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தன் கணவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என தெரிய வேண்டும் எனவும் தன்னை மிரட்டும் வணங்காமுடி மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தின் சம்பந்தியான வணங்காமுடியை பற்றி எந்த ரகசியமும், தன் கணவர் என்னிடம் கூறவில்லை எனவும், தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு கேட்டுள்ளார்.