வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள்...! வெளியான சிசிடிவி காட்சிகள்..!

குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை பின்தொடர்ந்து சென்று கீழே தள்ளிவிட்டு, தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்

வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள்...!  வெளியான சிசிடிவி காட்சிகள்..!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியை சேர்ந்தவர் அம்பி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் மனைவியை ஏற்றிக்கொண்டு நித்திரவிளை சந்திப்பு பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் தெருமுக்கு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்த போது தம்பதியினர் சென்ற வாகனத்தை இடித்து கீழே தள்ளிவிட்டு, பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9.5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர். 

இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் இருவரும் நிலைதடுமாறி சாலையின்  ஓரம் இருந்த மண்டபத்தின் முன்பக்கம் இருந்த கம்பியில் மோதி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அம்பி மற்றும் அவரது மனைவியை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நித்திரவிளை போலீசார் தங்கச் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து, அந்த பகுதிகளில் பதிவாகி உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .