சொந்த நிலத்தை அளந்து தருவதில் அதிகாரிகள் மெத்தனம் - தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தங்களுக்கு சொந்தமான நிலத்தை அளந்து தருவதில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து இலங்கை தமிழ் பெண் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த நிலத்தை அளந்து தருவதில் அதிகாரிகள் மெத்தனம் - தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்ப்புத்துபட்டு அகதிகள் முகாமை சேர்ந்தவர் மனோரஞ்சிதம்(50). இவரது பெயரிலும், இவரது சகோதரர் பெயரிலும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூர் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அருகில் உள்ள வீரச்சாமி மற்றும் தங்கம் (எ) பொன்னையா ஆகியோர் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்திலையில் தங்களுக்கு உரிய நிலத்தை கோர்ட்டு உத்தரவுப்படி பலமுறை கோரிக்கை வைத்தும் வருவாய்த்துறையினர் முறையாக அளந்து தரவில்லை. இதை கண்டித்து நேற்று மாலை நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனோரஞ்சிதம் தனது குடும்பத்துடன் டீசல் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.

உடனே அருகில் இருந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த டீசல் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தி தலையில் தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கை அகதி ஒருவர் குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.