அப்படி ஒரு சம்பவமே நடக்கல நீதிபதி ஐயா... கோர்ட்டில் கதறிய நபர்… நண்பர்கள் மீதான கோபத்தால் வந்த வினை!  

சென்னையில் உணவக உரிமையாளர் ஒருவர் நண்பர்கள் மீதே போலியான புகார் அளித்து போலீசை அலைக்கழித்ததோடு, அதை மேஜிஸ்டேட் இடம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.  

அப்படி ஒரு சம்பவமே நடக்கல நீதிபதி ஐயா... கோர்ட்டில் கதறிய நபர்… நண்பர்கள் மீதான கோபத்தால் வந்த வினை!   

சென்னையில் உணவக உரிமையாளர் ஒருவர் நண்பர்கள் மீதே போலியான புகார் அளித்து போலீசை அலைக்கழித்ததோடு, அதை மேஜிஸ்டேட் இடம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை சூளைப் பகுதியை சேர்ந்தவர் மனிஷ் (36). இவர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள அல்லிக்குளம் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பணிகளை முடித்துவிட்டு இரவு 1 மணி அளவில் தான் வீட்டிற்குச் சென்றுகொண்டு இருந்தபோது, வால்டாக்ஸ் சாலையில் அண்ணா பிள்ளை தெரு அருகே தன்னை பின்தொடர்ந்து வந்த 5 நபர்கள் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முற்பட்டதாகும், ஆனால் தான் லாவகமாக செயல்பட்டு வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி தப்பி விட்டதாகவும் கூறி யானைகவுனி காவல் நிலையத்தில் மனிஷ் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட யானைகவுனி போலீசார் மனிஷை  அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் 5 பேரும் அடையாளம் காட்டக் கூடியவர்கள்தான் எனவும் அவர்களை எங்கு பிடிக்க முடியும் எனவும் போலீசாரிடம் மனிஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்களை இரு தினங்களாகத் தேடித் திரிந்த போலீசார் இன்று காலை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே வைத்து 5 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது புகார் அளித்த மனிஷ்  திடீரென மாஜிஸ்ட்ரேட் முன்பு வந்து அன்று இரவு அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவில்லை எனவும், அவர்கள் 5 பேரும் தனக்கு நன்கு பரிச்சயமான தனது நண்பர்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், தான் தெரியாமல் பொய்ப் புகார் அளித்து விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அவர்களை விடுவிக்கும்படி கூறியதை அடுத்து அனைவரும் இதுபோன்ற தவறை இனி செய்யமாட்டோம் என எழுதிக் கொடுத்து விட்டு சென்றனர்.

சென்னை பெருநகர காவல்துறையில் போலீசாரின் பணிச் சுமைக்கிடையில், இதுபோன்று வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக போலீசார் 3 நாட்களாக கடுமையாக தேடிப் பிடித்து  மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தியபோது, அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என புகார் தெரிவித்த நபரே கூறி  போலீசை மூன்று நாட்களாக அலைக்கழித்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.