பல்லியுடன், மட்டன் பிரியாணியை பரிமாறிய உணவகத்துக்கு ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!!

Published on
Updated on
1 min read

பல்லி கிடந்த மட்டன் பிரியாணியை சாப்பிட்டதில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவருக்கு, ஓட்டல் நிர்வாகம் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஹோட்டல் டெக்கான் என்கிற உணவகத்தில், வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த அப்பாஸ் அலி, கடந்த 2022 பிப்ரவரி மாதம் மட்டன் பிரியாணியை சாப்பிட்ட பின், குமட்டல், வாந்தி, வயிறு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது 4 அங்குல நீளத்தில் பிரியாணியில் பல்லி கிடந்தை கண்டு, பயந்து அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவியும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மூன்று நாட்கள் சிகிச்சையும் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

அதன்பின்னர், தரமற்ற மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கக் கூடிய உணவை வழங்கியதாக கூறி, டெக்கான் ஓட்டல் நிர்வாகம் தனக்கு இழப்பீடாக 2 லட்ச ரூபாய் மருத்துவ செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய், மன உளைச்சலுக்காக ஒரு லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த தலைவர் வினோபா, உறுப்பினர் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஓட்டல் நிர்வாகத்திற்கு எதிராக உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டி, உணவு பொருளில் பல்லி விழுந்தால், உணவு விஷமாக மாறி, அந்த உணவை உண்பவர் உயிரிழக்கவும் நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர். எனவே, பாதுகாப்பற்ற உணவை வழங்கி, சேவை குறைபாடுடன் நடந்த டெக்கான் ஓட்டல் நிர்வாகம் மனுதாருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாய், மருத்துவ செலவாக 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை சேர்த்து 55 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com