கொலைக்கு பழிவாங்க காத்திருந்த நபர்கள்... பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது...

தனது மகனை கொலை செய்த நபர்களை பழிவாங்க திட்டம் தீட்டிக் காத்திருந்த 4 நபர்களை போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து நாட்டுவெடிகுண்டு, பட்டாக் கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கொலைக்கு பழிவாங்க காத்திருந்த நபர்கள்... பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது...

சென்னை மயிலாப்பூர் பல்லாக்கு மாநகர் அரசு மதுபான கடை அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி சரவணன்(25) என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மணிகண்டன், ஷாம், அஜித், விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் 4 நபர்களை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் மயிலாப்பூர் போலீசார் நொச்சி நகரில் வசித்து வரக்கூடிய இறந்து போன சரவணனின் தந்தை முருகேசன், சகோதரர்கள் முருகன், கார்த்திக் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்து போன தனது மகனை கொலை செய்த நபர்கள் பிணையில் வெளியே வந்தவுடன் அவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி வந்தது நிரூபணமாகியது.  

மேலும் கொலை செய்வதற்காக கண்ணகி நகரைச் சேர்ந்த சுனாமி சுரேஷிடம் நாட்டு வெடிகுண்டு மற்றும் செம்மெஞ்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பட்டாக் கத்திகள் ஆகியவற்றை வாங்கி வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர்களிடமிருந்த நாட்டு வெடிகுண்டு மற்றும் 5 பட்டாக் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் நான்கு பேரிடமும் மயிலாப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.