கொள்ளைபோன நகை; கண்டுபிடிக்காத போலீஸ்; இழப்பீடு கேட்டு மனு!  

கொள்ளைபோன நகை; கண்டுபிடிக்காத போலீஸ்; இழப்பீடு கேட்டு மனு!  

கொள்ளை போன நகையை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறுவதால் அந்த நகைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கபட்டவர் தாக்கல் செய்த மனுவிற்கு உள்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தங்கம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
"நான் சிங்கம்புணரி அரசு பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றேன். கடந்த 2019 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நான் பள்ளிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சுமார் 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போனது.
இது குறித்து  சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கவும், இந்த வழக்கு விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2021 ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது குறித்து காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கு தாக்கல் செய்தேன். அவமதிப்பு வழக்கில் நகை கொள்ளை போனதை கண்டுபிடிக்க முடியவில்லை என வழக்கை முடித்து வைத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இவ்வாறு காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே எனது வீட்டில் கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர இயலாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு இழப்பீடாக ரூபாய் 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி காணாமல் போன நகைக்கு இழப்பீடு வழங்குவது சம்பந்தமாக தமிழக உள்துறை செயலர் உரிய  முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிக்க:பிரபல ரவுடி மதுரை பாலா கேரளாவில் கைது!