ஜெயிலில் போன் விற்பனை: சிறைக் காவலர் உட்பட 3 பேர் கைது!

சிறைக்குள் வந்த திருடனிடம் செல்போன்களைத் திருடச் சொல்லி விற்று வந்த சிறைக் காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

ஜெயிலில் போன் விற்பனை: சிறைக் காவலர் உட்பட 3 பேர் கைது!

சென்னை அமைந்தகரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த சிபி என்ற குற்றவாளியை அமைந்தகரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின் திருடனான சிபி-யிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கைதாகி சிறைக்குச் சென்றபோது ஜெயில் வார்டனாக பணிபுரிந்து வரும் சிறைக் காவலர் ரமேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் ஜெயில் வார்டனான சிறைக் காவலர் ரமேஷ் சிபி-யிடம் செல்போன்களைத் திருடி தன்னிடம் கொடுக்குமாறும், அப்படி கொடுத்தால் அதனை தனக்கு தெரிந்த நபர்களிடம் விற்று, வரும் பணத்தில் ஆளுக்கு பாதி பாதி எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்டால் ஜெயிலில் சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்து, அதன்படியே மது உட்பட பல வசதிகளை குற்றவாளியான சிபி-க்கு சிறைக்காவலர் ரமேஷ் செய்து கொடுத்து வந்துள்ளார். சிறையில் சிறைக் காவலரால் சொகுசாக இருந்த சிபி இரண்டு மாதங்களுக்கு முன் வெளியே வந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட செல்போன்களை சிறைக் காவலரான ரமேஷிடம் கொடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும், சிறைக் காவலர் ரமேஷ் பர்மா பஜாரில் திருட்டு செல்போன்களை வாங்கும் கார்த்திக் என்பவனிடம் அதனை விற்று 70 சதவிகித பணத்தை தான் எடுத்துக்கொண்டு, மீதி பணத்தை செல்போன் திருடனான சிபி-யிடம் கொடுத்து வந்தார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. அதனடிப்படையில் செல்போன் திருடன் சிபி-யுடன் சிறைக் காவலர் ரமேஷ் மற்றும் பர்மா பஜாரில் திருட்டு செல் போன்களை வாங்கி விற்கும் கார்த்திக் ஆகிய 3 பேரையும் அமைந்தகரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சிறைக்காவலர் செல்போன் திருடி ஜெயிலுக்கு வரும் செல்போன் திருடர்களிடம் இதேபோல் ஒப்பந்தமிட்டு அவர்களிடமிருந்து திருட்டு செல்போன்களை பெற்று வந்துள்ளது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறைக் காவலர் ரமேஷ் எத்தனை குற்றவாளிகளிடம் இதேபோன்று ஒப்பந்தம் செய்து செல்போன் டீலிங் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறித்து அமைந்தகரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறைக்கு வரும் குற்றவாளிகளிடம் சிறைக் காவலர் செல்போனை திருட செய்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது காவல்துறை மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.