பச்சிளம் குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த ஊக்...அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்

8 மாதக் குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த ஊக்கை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கிய சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

பச்சிளம் குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த ஊக்...அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்

கேரள மாநிலம் திருச்சூர் மண்ணுத்தி பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்- தீபா தம்பதி.  இந்த தம்பதிக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.  குழந்தை கடந்த 2 வாரங்களுக்கு மேலாக  உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்ததால்,   சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் குழந்தையின் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் குழந்தைக்கு வேறு எதாவது பிரச்சனை இருக்கிறதா என்று சந்தேகித்த மருத்துவர்கள் உடனடியாக ஸ்கேன் எடுப்பதற்கு முடிவு செய்தனர். பின்னர் குழந்தைக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனை மருத்துவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் சுவாசக் குழாயில் ஒரு ஊக்கு சிக்கி இருப்பது தெரியவந்தது. 

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் சுவாசக் குழாயில் இருந்த ஊக்கை அகற்றினர். மேலும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்ததால், இன்று குழந்தையை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.