எஸ்.ஜி.சூர்யா வழக்கு; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தடை!

எஸ்.ஜி.சூர்யா வழக்கு; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தடை!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டதாக தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ். ஜி.சூர்யா மீது பதியபட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபையிலிருந்து வழிபட அனுமதிக்கும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அங்கு பூஜை நடத்திய தீட்சிதர் ஒருவரைத் தாக்கி பூணூலை அறுத்ததாக ‘தி கம்யூன்’ என்ற இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இரு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறி சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஜூன் 28-ம் தேதி அளித்த புகாரில் செய்தி நிறுவன இயக்குனரும்,  தமிழ்நாடு பாஜக மாநில செயலாளருமான எஸ். ஜி.சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ். ஜி.சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், கருத்து சுதந்திரத்தையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் முடக்கும் நோக்கிலும், வழக்கு பதியப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரானைக்கு வந்தபோது, சூர்யா தரப்பில், பொதுமக்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில், ஆளும் கட்சி நிர்வாகத்தில் அக்கறை கொண்ட கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. 

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கு தொடர்பாக 6 வாரங்களில் சிதம்பரம் காவல் நிலையத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டதுடன், அதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:அரிசி ஏற்றுமதி: தடை விதித்த இந்தியா; தட்டுப்பாட்டில் அமெரிக்கா!