புழல் சிறை கைதி அப்துல் ஹக்கீம்... விடுப்பு நீட்டிப்பு....!!

புழல் சிறை கைதி அப்துல் ஹக்கீம்... விடுப்பு நீட்டிப்பு....!!

மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதால், கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்துல் ஹக்கீம் என்பவருக்கு மூன்று மாத விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 நாட்கள் விடுப்பு:

கடந்த 1998 ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் ஹக்கீம், தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.  மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு விடுப்பு வழங்கக் கோரி, அவரது மனைவி ரஹ்மத் நிஷா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 30 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டது.

முடிந்த விடுப்பு:

தற்போது, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு வழங்கப்பட்ட 30 நாட்கள் விடுப்பு முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர் மற்றும் நிர்மல்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மேலும் நீட்டிப்பு:

அப்போது, அவர் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என கோவை மருத்துவமனை அளித்த அறிக்கையை அவரது மனைவி தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.  இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஓராண்டுக்கு மட்டுமே அவர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, மூன்று மாதங்கள் கூடுதலாக விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

பாதுகாப்பு:

வரும் ஜூன் 7 ம் தேதி ஹக்கீம் புழல் சிறையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை அவருக்கு பாதுகாப்பாக செல்லும் போலீசார், மருத்துவமனை அழைத்துச் செல்லும் போது, தாமதப்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com