போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் வீடுகளில் ரெய்டு: ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 190 சவரன் தங்கம் பறிமுதல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் போக்குவரத்து ஆணையரின் நேர்முக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவுபெற்றது.  

போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் வீடுகளில் ரெய்டு: ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 190 சவரன் தங்கம் பறிமுதல்

முன்னாள் போக்குவரத்து ஆணையரின் நேர்முக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவுபெற்றது. சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் போக்குவரத்து ஆணையரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்தவர் முரளிதரன். இவர், கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சென்னை, மதுரை, தேனி ஆகிய பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சென்னை விருகம்பாக்கம், மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் தேனி ஆகிய 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனை நடத்தினர்.

இந்நிலையில், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 190 சவரன் தங்க நகை, 2 ஆயிரத்து 468 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 43 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், ஹார்ட்டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.