அலட்சிய போக்குடன் உயிர்களில் விளையாடும் ராஜீவ் காந்தி மருத்துவமனை!!

ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு, ஆஞ்சியோ சிகிச்சைக்கு நல்ல உடல் நிலையில் வந்த பெண்ணிற்கு, அலட்சியமான சிகிச்சையால் கையை அகற்றிய அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  ஜீனத். அவரது மனைவி ஜோதி (32) உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டுமென தனியார் மருத்துவர்கள் அறிவித்ததின் அடிப்படையில்  கடந்த 13ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஜோதி அனுமதிக்கப்பட்டார் 

உடலில் எந்தவித காயமும் இல்லாமல் ஆஞ்சியோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு 15ஆம் தேதி ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சியோ சிகிச்சையில் எந்தவித அடைப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சை மேற்கொண்ட கை முழுவதும் வீக்கம் அடைந்தது  கையில் ரத்த  உறைவு ஏற்பட்டுள்ளது. கையில் இருக்கும் சதைகளை கீறினால் சரியாகிவிடும் என தெரிவித்ததுடன், கை கால்கள் என அனைத்து சதைகளையும் மருத்துவர்கள் கிழித்து எடுத்து விட்டதாகவும் இது தொடர்பாக மருத்துவர்கள் எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை எனவும், கேட்டால் ரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறது என்று மட்டும் தான் தெரிவிக்கிறார்கள் எனவும் குற்றம் சட்டியுள்ளார்.

மேலும், "நேற்று எனது மனைவியின் கையை எடுத்தால் மட்டும் தான் எனது மனைவி உயிர் பிழைக்க முடியும் என தெரிவித்து எனது மனைவியின் வலது கையை முழுவதுமாக எடுத்து விட்டனர். தற்போது இன்று இடது காலையும் எடுக்க வேண்டும் என தெரிவிக்கிறார்கள். நல்ல உடல்நிலையுடன் ஆஞ்சியோ சிகிச்சைக்கு வந்தால், இப்படி அலட்சியத்துடன் மருத்துவம் பார்த்து உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளிவிட்டனர்" என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் ஜீனத்.

இந்நிலையில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தனது x தளத்தில் இதனை கண்டித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த ஜோதி என்ற பெண்ணிற்கு முறையான  சிகிச்சை அளிக்காததன் காரணமாக கை அகற்றப்பட்டதாக செய்திகள் வருகின்றன" எனவும் 

"கடந்த ஆண்டு தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவமும் ஏற்படுத்திய காயமே இன்னும் ஆறும் முன்னர் மீண்டும் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது, அலட்சியமும் அக்கறையின்மைக்கும் உதாரணமாக இருக்கும் இந்த விடியா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றது என்பதற்கான பெரும் எடுத்துக்காட்டு" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || எங்கடா இங்க இருந்த வாழைத்தாரை காணோம்.. கட்சிக் கூட்டத்தில் திமுக தொண்டர்களின் அலப்பறை!!