வீட்டருகே விளையாடி கொண்டிருந்த சிறுவனை அடித்தே கொன்ற கொடூர பெண்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுவனை அடித்துக்கொன்ற வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் கைது செய்யப்பட்டு கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீட்டருகே விளையாடி கொண்டிருந்த  சிறுவனை அடித்தே கொன்ற கொடூர பெண்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பண்ருட்டி அருகே கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன்- தனலட்சுமி தம்பதியின் இரண்டாவது மகன் அஸ்வித், நேற்று மாலை தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காணாமல் போயுள்ளார். 4 வயது சிறுவனான அஸ்வித்தை அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அதே கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் சிறுவன் அஸ்வித் தலை மற்றும் உடம்பில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக முத்தாண்டிகுப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுவனின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவன் அஸ்வித் வீட்டருகே வசிக்கும் ரஞ்சிதா என்பவரை பிடித்து விசாரித்த போது, ரஞ்சிதா சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்ததும், சிறுவனை அடித்து கொன்றதும் தெரியவந்தது. மேலும் கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.