மீண்டும் மீண்டும் விசாரணை கைதிகள் உயிரிழப்பு - 4 காவலர்கள் சஸ்பெண்ட்

செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட தினேஷ் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு போலீசார் தாக்கியதே காரணம் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டு

மீண்டும் மீண்டும்  விசாரணை கைதிகள்  உயிரிழப்பு -  4 காவலர்கள் சஸ்பெண்ட்

இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண் உதவி ஆய்வாளர் உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 2 தலைமை காவலர்கள் என மொத்தம் 4 பேரை காவல் கட்டுப்பாட்டறைக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை காரப்பாக்கம்  கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் கிளோடியோ (21) என்பவர் கடந்த 20 ஆம் தேதி மாலை, 119 என்ற எண் கொண்ட மாநகர பேருந்தில் பயணித்து கொண்டிருந்தபோது துரைப்பாக்கம் அருகே பேருந்து சென்றபோது இரு நபர்கள் ஸ்டீபனிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட ஸ்டீபன் உடனடியாக பேருந்தில் பயணித்த பொதுமக்கள் உதவியுடன் தப்பியோடியவர்களில் ஒருவனை மட்டும் பிடித்து கண்ணகி நகர் சுங்கச்சாவடி அருகே உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில் பெரம்பூர் நீளம் கார்டன் 3வது தெருவைச் சேர்ந்த தினேஷ் குமார்(26) என்பதும், அவன் மீது கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உட்பட பல காவல் நிலையங்களில் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும் ஸ்டீபனிடம் பறித்த செல்போனை தனது கூட்டாளியான ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாகவும் தினேஷ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து போலீசார்  தினேஷ்குமாரின் மனைவியான கௌசல்யா என்பவரை தொடர்பு கொண்டு, செல்போன் திருட்டு வழக்கில் உங்கள் கணவர் பிடிப்பட்டுள்ளதாகவும், திருடிச்சென்ற செல்போனை அவரது நண்பரிடம் இருந்து வாங்கி கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தினேஷ் குமாரின் மனைவி கௌசல்யா மற்றும் அவரது தாய் ஆகியோர் மூலக்கொத்தளம் பகுதிக்குச் சென்று ஸ்டீபன் என்பவரிடம் பறிக்கப்பட்ட செல்போனை தினேஷ் குமாரின் நண்பரிடம் இருந்து வாங்கி கண்ணகி நகர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். 

மேலும் படிக்க | விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியர்... ! அசல் சான்றிதழ்களை ஒப்படைக்காத பல்கலைக்கழகம்

பின்னர் செல்போன் கிடைத்து விட்டதால் ஸ்டீபன் புகார் ஏதும் வேண்டாம் எனக் கூறி எழுதிக் கொடுத்து சென்றதால், தினேஷ் குமாரை போலீசார் எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அவரது மனைவி மற்றும் தாயுடன் அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டிற்குச் சென்ற தினேஷ் குமார் மிகவும் சோர்வாக இருந்ததால், அவரை குடும்பத்தார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் உணவருந்திவிட்டு உறங்கிய தினேஷ் குமாருக்கு திடீரென இரவில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுய நினைவின்றி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனே தினேஷ் குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குடும்பத்தார் அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள்

இச்சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த தினேஷ் குமார், விவாகரத்து பெற்றிருந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஒரு மாதமாக பெரம்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததும், தினேஷ் குமார் ஹோட்டல்களில் சிமினி சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது சிறு சிறு கூலி வேலைகளை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி மாலை வீட்டாரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தினேஷ் குமார், பின் செல்போன் திருட்டில் ஈடுபட்டு பிடிப்பட்டதாக போலீசார் தகவல் அளித்து அவரை அழைத்து வந்ததாகவும் குடும்பத்தார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.