ஜூனியர் மாணவனை ராக்கிங் செய்த சீனியர் மாணவர்கள்...!

முதலாமாண்டு மாணவரை தாக்கி மொட்டை அடித்து ராக்கிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியொன்று இயங்கி வருகிறது. 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இந்த கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் ராயர் பாளையத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், முதலாமாண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் முதலாமாண்டு மாணவர்களை, கல்லூரியின் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த 6-ம் தேதியன்று விடுதியில் அறை எண் 225-ல் தங்கியிருந்த ஜூனியர் மாணவனை அழைத்த சீனியர் மாணவர்கள், அறை எண் 401-க்கு இழுத்துச் சென்றனர். 

இதைத் தொடர்ந்து மாணவனை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்தவர்கள், ஆபாச வார்த்தையால் திட்டித் தீர்த்து மொபைலில் கேமராவும் எடுத்துக் கொண்டனர். மேலும் அந்த மாணவனுக்கு மொட்டையடித்த பிற மாணவர்கள், மது அருந்துவதற்கு பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.  

இதையும் படிக்க : கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...!

இவ்வாறு கொடுமைகளுக்கு ஆளான அந்த மாணவன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, திருப்பூரில் இருந்து பதறியடித்தபடியே கல்லூரியை சென்றடைந்தனர். ராக்கிங் கொடுமை குறித்து பெற்றோர் புகார் அளிப்பதற்கு முடிவெடுத்த நிலையில், கல்லூரியின் பெயர் கெட்டுப் போய் விடும் என்றும், பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியதாக தெரிகிறது. 

இதையடுத்து மாணவனின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி நிர்வாகத்துக்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் முதலாமாண்டு படித்த மாணவனை ராக்கிங் செய்த சீனியர் மாணவர்களான தரணிதரன், வெங்கடேஷ், மாதவன், மணி, ஐயப்பன், சந்தோஷ் மற்றும் யாலிஷ் என மொத்தம் 7 பேரை கைது செய்தனர். 

ராக்கிங் சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த விவகாரம் கோவை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.