இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... பரிசு அனுப்புவதாக கூறி மூதாட்டியிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பலே கில்லாடி...! மடக்கி பிடித்த போலீசார்!!

பரிசு அனுப்புவதாக கூறி ஊட்டி தேயிலை எஸ்டேட் பெண் உரிமையாளரிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மும்பையை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.  
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... பரிசு அனுப்புவதாக கூறி மூதாட்டியிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பலே கில்லாடி...! மடக்கி பிடித்த போலீசார்!!
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த தனியார் தேயிலை எஸ்டேட் உரிமையாளரான 67 வயது மூதாட்டிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நபருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் தான் இங்கிலாந்து நாட்டில் இருப்பதாகவும், மனைவி இறந்துவிட்டதால் குழந்தையுடன் வசிப்பதாகவும் தெரிவித்தார். இருவரும் மின்னஞ்சல் முகவரியில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். ஒரு கட்டத்தில் அந்த நபர் தனது குழந்தை உங்களுக்கு பரிசு அனுப்ப விரும்புவதாக  கூறினார். இதை நம்பிய மூதாட்டி குழந்தையிடம் பரிசு பெற விரும்பினார்.

இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரி என பெண் ஒருவர் மூதாட்டியை தொடர்புகொண்டு உங்களுக்கு பரிசுப் பொருளை இந்திய நாட்டில் இறக்குமதி செய்ய வரி செலுத்த வேண்டும் என்றார். பின்னர் குழந்தையின் தந்தை தனது மகள் பரிசு அனுப்புவதற்கு பதில் தெரியாமல் 10 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். அதனை விடுவிக்க வரி செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதனை நம்பிய மூதாட்டி தன்னிடம் இருந்த பணம், நகைகளை அடமானம் வைத்து சம்பந்தப்பட்ட நபருக்கு வங்கி மூலம் ரூ.73 லட்சம் செலுத்தி உள்ளார். அதன்பின் மீண்டும் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்களை தேடி வந்தனர்.

அப்போது மோசடி செய்த நபர்கள் மும்பையில் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர். வங்கியில் செலுத்திய பணத்தை பெற்றதாக மும்பை தானே பகுதியை சேர்ந்த விஷால் பாபா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வங்கி கணக்கில் செலுத்திய பணம் ஜார்க்கண்ட், புதுடெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட பல கும்பல்களை சேர்ந்த 15 பேரிடம் கை மாறியது தெரியவந்தது. மேலும் அங்கு சாலையோரத்தில் வசித்து வரும் பிச்சைக்காரர்கள், ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில் இதுவரை நீலகிரியில் ஆன்லைன் மோசடி சம்பந்தமாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com