எஸ்.வி.சேகரின் மனுக்கள் தள்ளுபடி!!

எஸ்.வி.சேகரின் மனுக்கள் தள்ளுபடி!!

தன் மீதான வழக்குகளை ரத்துச் செய்யக் கோரி எஸ் வி சேகர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர்  இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் யூ டியூபில் வீடியோ வெளியிட்டதாக, எஸ்.வி.சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரிலும் மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது பதிவுகளை உடனடியாக நீக்கியதுடன், தனது செயலுக்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியிருந்ததாக வாதிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஒருவரின் பேச்சு அல்லது செயல் ஏற்படுத்திய பாதிப்பை  மன்னிப்பு கேட்பதின் மூலம் சரிகட்டிவிட முடியாது எனவும், பதிவுகளை பார்வேர்ட் செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் முழு பொறுப்பாவார் என தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார். 

மேலும், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு விசாரணை நீதிமன்றத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறி, சேகருக்கு எதிரான வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

அதேசமயம், தேசிய கொடி அவமதிப்பு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க || சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கல்லடி வாங்கிய வந்தே பாரத் ரயில்!