இரண்டாவது திருமணம் செய்த கணவர்… நடவடிக்கை எடுக்கக்கோரி முதல் மனைவி போலீசில் புகார்!

மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கணவர், இரண்டாவது மனைவி மற்றும் மாமியார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

இரண்டாவது திருமணம் செய்த கணவர்… நடவடிக்கை எடுக்கக்கோரி முதல் மனைவி போலீசில் புகார்!

சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தன் கணவர் உள்பட மூன்று பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரியதர்ஷினி, கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நங்கநல்லூரைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடந்ததாகவும், போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் லாரன்ஸ் தொடர்ந்து தனது பிறந்த வீட்டில் இருந்து தன்னை பணம், நகை பெற்று வருமாறு அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தன்னை தனது கணவரான லாரன்ஸ் வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்தியதால் தான் வேலைக்குச் சென்று அதன் மூலம் வங்கியில் தனது கணவர் லாரன்ஸ்-க்கு லோன் பெற்றுக் கொடுத்ததோடு புது இருசக்கர வாகனமும் வாங்கிக்கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அதன் பின்னரும் தனது கணவர் போதையில் தன்னை அடித்து துன்புறுத்தியதால் போலீசில் புகார் அளித்ததாகவும், போலீஸ் விசாரணையில் தனது கணவர் லாரன்ஸ் தான் வாங்கிய லோன் பணத்தை கட்டுவதுடன், மனைவியிடம் இருந்து வாங்கிய இருசக்கர வாகனத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், 6 மாதம் தனியாக இருந்துவிட்டு பின் தன்னுடன் சேர்ந்து வாழ்வதாகவும் கூறியதால் தான் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரியதர்ஷினி, தனது கணவரான லாரன்ஸ் வங்கியில் பெற்ற லோனை செலுத்தாததால் அதைக் கேட்க தனது தாயுடன் சென்றபோது திவ்யா என்ற பெண் வந்து தனது கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறியதாகவும் அப்போது அங்கு வந்த தனது கணவர் லாரன்ஸ் மற்றும் அவரது தாய் ஜெயசிலி ஆகிய இருவரும் இனி நீ எங்களுக்கு தேவையில்லை எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி தங்கள் இருவரையும் மரக்கட்டையால் அடிக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தான் தற்போது தன்னை முறையாக விவாகரத்து செய்யாமலும், தனக்கு தெரியாமலும் இரண்டாவது திருமணம் செய்த கணவர் லாரன்ஸ், இரண்டாவது மனைவி திவ்யா, மாமியார் ஜெயசிலி ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். காவல்துறை தரப்பில் முறையான விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.