தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள் பறிமுதல்!

Published on
Updated on
1 min read

தாய்லாந்தில்  இருந்து  கடத்தி வரப்பட்ட அரிய வகை 15 மலைப்பாம்பு குட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள்  பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை  அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கன்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 35 வயது வாலிபர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரது  உடைமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். 

அப்போது பைகளில் இருந்த கூடையில் ஏதோ லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் அதனை  திறந்து பாா்த்தனா். அதில் அழகான பாம்பு குட்டிகள் நெளிந்து கொண்டிருந்தன. இந்த பாம்புகள் காடுகளில் வாழும் அரிய வகை பாம்புகளாகும். இதில் மொத்தம் 15 மலைப் பாம்பு குட்டிகள், 1 அரிய வகைவகை அணில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பயணியிடம் விசாரித்த  அதிகரிகள் இந்த அபூர்வ வகை குட்டிகள் இதை வளர்க்க எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் அந்த நபர்.  

ஆனால் விலங்குகளை கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் மருத்துவ பரிசோதனை செய்து நோய்க் கிருமிகள் ஏதாவது இருக்குதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவை இல்லை. 

மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறை இடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால், எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் அபூர்வ உயிரினங்களை பறிமுதல் செய்தனர்.  பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது இவை அபூர்வ வகையை சேர்ந்தது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com