தொடர் வழிப்பறி, பைக் திருட்டு.. சிக்கிய சிறுவண்டுகள் - அதிரடியில் இறங்கிய போலீஸ்!!

தொடர் வழிப்பறி, பைக் திருட்டு.. சிக்கிய சிறுவண்டுகள் - அதிரடியில் இறங்கிய போலீஸ்!!

போலீசார் தீவிர ரோந்து பணி

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி மற்றும் பைக் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. புகார்களை தொடர்ந்து தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் தனிப்படை அமைத்து இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

துரத்தி சென்று பிடிக்க முயன்ற போலீஸ்

வண்டலூர்- கேளம்பாக்கம் பிரதான சாலை மாம்பாக்கம் பகுதியில் வழிபறியில் ஈடுபடும் நபர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்பொழுது அந்த பகுதியில் நடந்து சென்றவரிடம் இருந்து பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்துச் சென்றதாக அப்பகுதியில் இருந்த தனிப்படை போலீசார்க்கு தகவல் தெரியவர இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற வழிப்பறி கொள்ளையனை தனிப்படை போலீசார் துரத்தி சென்று பிடிக்க முயற்சித்தனர்.

வழிப்பறி கொள்ளையன் கைது

வழிப்பறி கொள்ளையன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு சாலைக்கு அருகே உள்ள ஒரு முப்புதரில் ஒளிந்து கொண்டுள்ளார். தனிப்படை போலீசார் இரவென்றும் பாராமல் முட்புதரில் பதுங்கி இருந்த நபரை பிடித்து தாழம்பூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த 3 பேர்

விசாரணையில் சிறுசேரி பகுதியைச் சேர்ந்த 19 - வயதான தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் தினேஷிடம் தொடர்ந்து நடத்திய விசாரரணையில், தனுடன் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்களான சிறுசேரி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த 18-வயதான மற்றொரு தினேஷ், நந்திவரம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த 24-வயதான சதாம் உசேன், ஒரு இளம் சிறார் உள்ளிட்ட மூன்று நபர்களுடன் சேர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

3 நபர்கள் போலீசாரால் கைது

தினேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி மூன்று நபர்களை போலீசார் கைது செய்து தாழம்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்கள், 1 செல்போன், 475 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சதாம் உசேன் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறையில் அடைப்பு

தொடர்ந்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தாழம்பூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு மூன்று பேரை சிறையில் அடைத்தனர். இளஞ்சிறாரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். சென்னை புறநகர் பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை துரிதமாக கைது செய்த தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான தனிப்படை போலீசாரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.