கணவர் இறந்ததில் அதிர்ச்சி... விபரீத முடிவெடுத்த தாய் !!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மகனுக்கு விஷ மாத்திரைகளை கொடுத்து மனைவியும் அதனை உண்டு தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கணவர் இறந்ததில் அதிர்ச்சி...  விபரீத முடிவெடுத்த தாய் !!

கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும் 7ம் வகுப்பு படிக்கும் ஹரிகுக விக்னேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கிய லோகநாதன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. இதனால் பணிக்கு சரியாக செல்ல முடியாததால் குடும்பச் செலவை சமாளிக்க முடியாமல் தத்தளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே, லோகநாதன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் மகனை டியூசனுக்கு தனது இருசக்கர வாகனத்தில் விட்டுவிட்டு வந்த லோகநாதன், திரும்பும் வழியில் வாய்க்கால் சாலையில் உள்ள பூங்காவுக்குச் சென்று விஷம் குடித்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து மயங்கிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோதும், சிகிச்சைப் பலனின்றி லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த அவரது மனைவி பத்மாவதி நீண்ட நேரம் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், மகனுக்கு விஷ மாத்திரைகளைக் கொடுத்த பத்மாவதி தானும் அதனை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து இருவரையும் உறவினர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இருப்பினும் பத்மாவதி கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்த வெளிவராத நிலையிலேயே காணப்பட்டார்.

மகனின் கல்விச் செலவை சமாளிக்க முடியாததால், கணவர் தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாமல் மகனோடு சேர்ந்து மனைவியும் தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.