சென்னைக்கு வந்த விமானங்களில் தங்கம் கடத்தல்....

சென்னைக்கு வந்த விமானங்களில் தங்கம் கடத்தல்....

மலேசியா, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த 3 விமானங்களில், கடத்தி வரப்பட்ட ரூ.2.03 கோடி மதிப்புடைய, 3.953 கிலோ தங்கம், சென்னை விமான நிலைய த்தில் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் பயணிகள் 3 பேரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

ரகசிய தகவல்:

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு  துபாயில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ்  பயணிகள் விமானம், மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் அடுத்தடுத்து வந்தன.  இதை அடுத்து மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானமும் வந்தது.  இந்த 3  விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தீவிர கண்காணிப்பு:

இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த 3 விமானங்களில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.  சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி விசாரணை நடத்தியதோடு, அவர்கள் உடமைகளையும் பரிசோதித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில்..:

அப்போது  மலேசியா நாட்டிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த ஒரு ஆண் பயணியின் ட்ராலி டைப் சூட்கேஸை சந்தேகத்தில் ஆய்வு செய்தனர்.  அந்த சூட்கேசில் கொடுக்கப்பட்டிருந்த, பைபர் பீடிங்கிற்குள், தங்க சுருள் கம்பிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

பறிமுதல்:

அதேபோல் துபாயில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் வந்த, மற்ற இரண்டு ஆண் பயணிகளின் சூட்கேஸ்களில், தங்க உருளைகள், தங்கக்கட்டிகள் இருந்ததையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.  3 விமானங்களில் வந்த 3 பயணிகளிடம் இருந்து மொத்தம், சுமார் 3.953 கிலோ எடை உடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.  அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் 2.03 கோடி.  இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 3 பயணிகளையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:  அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்றடைகிறதா.....