யாரையும் சும்மா விடக்கூடாது... கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த மாணவி...

யாரையும் சும்மா விடக்கூடாது என வாக்குமூலம் எழுதிவிட்டு கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவியின் முன்னாள் பள்ளி இயற்பியல் ஆசிரியர் தான் காரணம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாரையும் சும்மா விடக்கூடாது... கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த மாணவி...

கோவை உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி பொன் தாரணி (17), ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  

இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த ஏப்ரல் மாதம் மாற்றுச் சான்றிதழ் பெற்று கொண்டு வேறொரு தனியார் பள்ளியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ரீத்தா வின் தாத்தா, எலிசா சாருவின் தந்தை, மற்றும் தனது பள்ளி ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டி யாரையும் சும்மா விடக்கூடாது வாக்குமூலம் எழுதிவைத்து விட்டு மாணவி பொன் தாரணி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மாணவியின் பெற்றோர் அளித்த தகவலின்பேரில் உக்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின்  செல்போன், வாக்குமூல கடிதம் மற்றும் அவரது நண்பரின் செல்போன், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தான் முன்பு பயின்ற தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மாணவி தன்னிடம் தெரிவித்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தங்களது மகளின் தற்கொலைக்கு அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து பள்ளி தலையாசிரியை ஜெயலட்சுமி  கூறுகையில், கடந்த செப்டம்பர் முதல்வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம்பெயர இருப்பதால், மாற்றுச்சான்றிதழ் கேட்டுள்ளனர். இரு நாட்களில் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து விட்டதாகவும், அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை என்றார்.

ஆசிரியர் மிதுன் குறித்து பேச மறுத்துவிட்டார். பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் பேச முடியாது என்றார். ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும் அதே பள்ளியில் பணி புரிந்து வருகிறார். நடப்பாண்டில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வகுப்பு எடுப்பதில்லை என அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.