தூத்துக்குடியில் பயங்கரம்- பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் தாக்கிய நண்பர் .....

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை சரமாரியாக குத்தி கொலை செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தூத்துக்குடியில் பயங்கரம்-  பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் தாக்கிய நண்பர் .....

தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்தவர் சிவபெருமாள். ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும் தொம்மையார் காலனியை சேர்ந்த  ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி சொர்ண ராஜ் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் தினசரி தூத்துக்குடி சிதம்பர நகர் அருகே உள்ள மைய வாடியில் வைத்து மதுபானம் குடிப்பது வழக்கம்.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் 3 பேரும் வழக்கம்போல் மையவாடி அருகில் உள்ள எம்ஜிஆர் பூங்கா முன்பு உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். போதை அதிகம் ஆனதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஆறுமுகம் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவபெருமாளை விரட்டி விரட்டி  சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீஸ்  வழக்குப் பதிவு செய்து ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி சொர்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.