பிரதமர் மோடி பெயரில் நிதி வசூல்; தனியார் கல்லூரியில் இந்து சேனாவினர் அட்டகாசம்!

பிரதமர் மோடி பெயரில் நிதி வசூல்; தனியார் கல்லூரியில் இந்து சேனாவினர் அட்டகாசம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதமர் மோடி பெயரில் விநாயகர் சதுர்த்திக்கு டொனேசன் கேட்டு இந்து சேனா நிர்வாகிகள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனியார் நிர்வாகத்தால் இயக்கப்பட்டு வரும் தனியார் மாடரேட்டன் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு நேற்று காரில் மூன்று பேர் வந்த நிலையில், கல்லூரி அலுவலகத்தில் சென்று எங்களுக்கு டொனேசனாக பணம்  தாருங்கள் என்று  கேட்டுள்ளனர்.  அப்போது நீங்கள் யார்? எதற்காக உங்களுக்கு பணம் தர வேண்டும்? என்று கேட்ட போது,  வாக்குவாதம்  செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவில், நாங்கள் விநாயகர் சதுர்த்திக்கு, அன்னதானம் செய்ய பணம் வாங்கி வருகிறோம். இதெல்லாம் ஒரு தவறா நாங்கள் இந்து சேனா, நரேந்திரமோடி" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போன்று கல்லூரிக்குள் அலுவலக அறைக்குள்ளும் வாக்குவாதம்  நடந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
இதில் மூன்று பேர் பணம் கேட்டு வந்த நிலையில்,  நாங்க காசு கேட்க கூடாதா  என்று ஒரு கட்சி பெயரை கூறி  சண்டையிட்ட காட்சிகளும்  சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. கல்லூரிக்கு சென்று அத்துமீறி பிரதமர் பெயரை பயன் படுத்தி கட்டாய வசூல் செய்யும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:திமுக தலைமைக்கு தொடர்ந்து தலைவலியை உருவாக்கும் மேயர்கள்!