சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த சிறுவன்.... சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு...

ஆவடி அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த சிறுவன்.... சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு...

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தென்றல் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளாள். இவள் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுவன், சிறுமியை திருமண ஆசை வார்த்தை காட்டி, திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலை, திரு.வி.க. தெருவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமி இரு மாதத்திலேயே கர்ப்பம் ஆனார். பின்னர், பின்னர், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உறவினர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து மருத்துவமனையிலிருந்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 17 வயது சிறுவனை போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர், போலீசார் அவனை திருவள்ளூரில் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.