தலையை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு... 6 பேர் கைது...

திண்டுக்கல் அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய ஆறு பேரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

தலையை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு... 6 பேர் கைது...

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரை கடந்த இருபத்தி இரண்டாம் தேதி இரவு ஒரு கும்பல் மட்டப்பாறை பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் தலையை மட்டும் துண்டித்து அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வீசிச் சென்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீசார், இறந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய தேடுதல் வேட்டையில், அனுமந்தராயன் கோட்டை அருகில் உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்த மன்மதன்,  கார்த்திகேயன், சங்கரபாண்டி, மார்தீஸ்வரன், ராம்குமார், மணிகண்ட ராஜன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில்  பிடிபட்ட மன்மதன் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள மேம் பாலத்தில் இருந்து கீழே குதித்ததில்  கால் முறிவு ஏற்பட்டது.  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மதன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.